இன்றைய காலகட்டத்தில் பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன்களிலும் கூட சிறந்த டிஸ்ப்ளேக்கள் மற்றும் சக்திவாய்ந்த பிராசஸர்கள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், பல குறைந்த விலை ஸ்மார்ட்போன்களில் நெட்ஃபிலிக்ஸ் (Netflix) போன்ற முன்னணி OTT தளங்களில் HD அல்லது Full HD தரத்தில் வீடியோக்களைப் பார்க்க முடிவதில்லை. வெறும் 480p தரத்தில் மட்டுமே வீடியோக்கள் இயங்குவதைக் கண்டு பல பயனர்கள் ஏமாற்றமடைகிறார்கள். உங்கள் போனில் நல்ல ரேசலூஷன் கொண்ட திரை இருந்தும், ஏன் நெட்ஃபிலிக்ஸ் Full HD வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்ய முடிவதில்லை என்பதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பக் காரணங்களை இந்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.
வீடியோ உள்ளடக்கங்கள் சட்டவிரோதமாக நகலெடுக்கப்படுவதையோ அல்லது திருடப்படுவதையோ தடுக்க டிஜிட்டல் உரிமைகள் மேலாண்மை (Digital Rights Management - DRM) பயன்படுத்தப்படுகிறது. இதில் கூகுளின் 'Widevine DRM' என்பது ஆண்ட்ராய்டு சாதனங்களில் மிகவும் பிரபலமாகப் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புத் தொழில்நுட்பமாகும். நெட்ஃபிலிக்ஸ், பிரைம் வீடியோ போன்ற நிறுவனங்கள் தங்கள் பிரீமியம் உள்ளடக்கங்களைப் பாதுகாக்க இந்த சான்றிதழை அடிப்படையாகக் கொண்டே வீடியோ தரத்தை நிர்ணயிக்கின்றன.
உங்கள் ஸ்மார்ட்போனின் திரை எவ்வளவுதான் சிறப்பானதாக இருந்தாலும், சரியான DRM பாதுகாப்பு நிலை இல்லையெனில் உயர் வரையறை வீடியோக்களைப் பார்க்க முடியாது.
ஸ்மார்ட்போன்களில் Widevine பாதுகாப்பு முக்கியமாக இரண்டு நிலைகளில் பிரிக்கப்படுகிறது. அவை சாதனத்தின் வன்பொருள் (Hardware) மட்டத்திலான பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டவை:
ஒரு ஸ்மார்ட்போனில் Widevine L1 சான்றிதழைப் பெற உற்பத்தியாளர்கள் கூகுள் மற்றும் நெட்ஃபிலிக்ஸ் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து சில சோதனைகளைச் செய்ய வேண்டும். மேலும், இதற்கான பிரத்யேக வன்பொருள் பாதுகாப்பு அமைப்புகளையும், தகுந்த சிப்செட்களையும் பயன்படுத்த வேண்டும். குறைந்த விலை ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் போது, உற்பத்திச் செலவைக் குறைக்க சில நிறுவனங்கள் இந்த உரிமச் சோதனைகளையும், வன்பொருள் சான்றிதழ் பெறதலையும் தவிர்க்கின்றன. இதன் காரணமாகவே பல மலிவு விலை போன்கள் Widevine L3 நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
உங்கள் ஸ்மார்ட்போன் எந்த Widevine ஆதரவைக் கொண்டுள்ளது என்பதை மிக எளிதாகக் கண்டறிய முடியும். கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் 'DRM Info' என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து இயக்குவதன் மூலம், உங்கள் போனில் L1 உள்ளதா அல்லது L3 உள்ளதா என்பதை நொடியில் தெரிந்துகொள்ளலாம். மேலும் நெட்ஃபிலிக்ஸ் செயலியின் அமைப்புகள் (Settings) பக்கத்திற்குச் சென்றும் 'Playback Specification' பிரிவில் உங்கள் சாதனத்தின் ஸ்ட்ரீமிங் தரத்தைச் சரிபார்க்கலாம்.
உங்கள் ஸ்மார்ட்போனில் நெட்ஃபிலிக்ஸ் HD தரத்தில் இயங்குகிறதா? உங்கள் சாதனத்தில் என்ன Widevine சான்றிதழ் உள்ளது என்பதைச் சரிபார்த்து கருத்து பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்!









